Friday, July 24, 2015

குறட்டை விடுவது ஏன்?


நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. விழித்திருக்கும்போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது?
தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான். இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்தது.
அடுத்து, மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது.
என்ன காரணம்?
சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, அடினாய்டு/டான்சில் வளர்ச்சி, மூக்கு இடைச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்சினை, உடல் பருமன், கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணிகள் குறட்டை ஏற்பட வழிவகுப்பது உண்டு. புகை பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவதுண்டு.
ஆபத்தானதா?
குறட்டையைச் சாதாரணமானது என்று அலட்சியப்படுத்தவும் முடியாது. இதில் ஆபத்தும் உள்ளது. குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், அடிக்கடி கூடிக் குறைவதுடன், சில நேரம் அறவே சத்தம் இல்லாமல் போவது ‘அப்ஸ்டிரக்டிவ் ஸ்லீப் ஏப்னியா’ (Obstructive Sleep Apnea) எனப்படும்.
அப்போது மூச்சுக் குழாயில் முற்றிலுமாக அடைப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்த சுவாசமும் நின்றுவிடும். இதனால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்றுவிடும்.
ஆனால், இந்த மாதிரி நேரத்தில் மூளை விழித்துக்கொண்டு, உடலில் ஒருவித அதிர்வை உண்டாக்கி, சுவாசப் பாதை மீண்டும் திறந்துகொள்ள வழி செய்துவிடுகிறது. இதனால்தான், தூங்கிக் கொண்டிருப்பவரின் குறட்டைச் சத்தம் திடீரென்று நின்றுவிடுவதும், அடுத்த சில நொடிகளில் அவர் உடம்பைக் குலுக்கிக்கொண்டு மீண்டும் சுவாசிக்கத் தொடங்குவதும் நிகழ்கிறது.
இதில் சில ஆபத்துகளும் உள்ளன. இவர்களுக்கு இரவில் தூக்கம் கெட்டுவிடும். காலையில் எழுந்ததும் கடுமையாகத் தலைவலிக்கும். பகலில் புத்துணர்வே இல்லாமல் தூங்கி வழிவார்கள், வேலையில் கவனக்குறைவு ஏற்படும், ஞாபக மறதி உண்டாகும். இந்த நிலைமை நீடிக்கும்போது, இதயத் துடிப்பில் பிரச்சினை ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும், நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல நோய்களும் கைகோத்துக்கொள்ளும்.
தடுக்க என்ன செய்யலாம்?
# தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும்.
# மல்லாக்கப் படுக்க வேண்டாம்.
# ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்.
# உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
# தைராய்டு பிரச்சினைக்கு மருந்து சாப்பிட வேண்டும்.
# மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
# தேவையில்லாமல் தூக்க மாத்திரை சாப்பிடக் கூடாது. 

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...


தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்க...ு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.